இந்தியாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படும்- அமெரிக்கா விரைவில் முடிவு..!

வாஷிங்டன்:இந்தியாவுடனான நட்புறவை மதிக்கும் வகையில், மிகக் கடுமையான பொருளாதார தடை சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் முடிவு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘காட்சா’ என்ற சட்டம் அமெரிக்காவில் அமலில் உள்ளது.இதன்படி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடியும்.இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்தது.இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்க, அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கஎம்.பி.,யான இந்தியாவை பூர்வீகமாக உடைய ரோ கன்னா கூறியதாவது:ஒரு பக்கம் சீனாவும் மறுபக்கம் ரஷ்யாவும் தங்களுடைய எல்லையை விரிவுபடுத்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவு தொடர்வது மிக முக்கியமாகும்.அதனால் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் முடிவை, அதிபர் ஜோ பைடன் விரைவில் எடுப்பார். இதற்கு, பார்லிமென்டில், 300க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.