நன்றி அண்ணா.. இனிமேல் அவங்களுக்கு பின்னடைவு தான்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ் ..!

பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி அண்ணா, இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினமா செய்தார். இதனையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பீகார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை யாகும். இதனையடுத்து, துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பீகார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், துணை முதலமைச்சகராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் தேஜஸ்விக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையில் காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி என்று தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்;- “நன்றி அண்ணா! இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். அவர்களுக்கு இன்று முதல் பின்னடைவு தொடங்குகிறது என தெரிவித்துள்ளார்.