நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கை – அமைச்சர் கே.என் நேரு தகவல்..!

டந்த 20ஆம் தேதி தமிழக சட்டசபையில் பொதுபட்ஜெட்டும், மறுநாளான 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அப்போது, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதாவது, கடந்த ஆண்டில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சியாகவும் இருபத்தெட்டு பேரூராட்சிகள் நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், பெருந்துறை, அவினாசி, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு உள்ளிட்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுவது குறித்தும் முடிவெடுக்கப்படும்.

சென்னை மாநகருக்கு முந்தய அரசால் வழங்கப்பட்ட 830 எம்.எல்.டி குடிநீர் அளவு தற்போது ஆயிரத்து 30 எம்.எல்.டியாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நெம்மேலிக்கு அருகில் உள்ள பேரூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.