உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயிலில் இருந்து காணிக்கை திருடப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது.
இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தர்மசேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: 1989-ல் துவங்கிய ஸ்ரீராம ஜென்ம பூமி கோயில் போராட்டக் காலங்களில் நன்கொடை திரட்டப்பட்டது. அப்போது கோயில் கட்டுமானப் பணிக்காகப் புனிதமான கற்களும் கோரப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழிபாடு செய்யப்பட்டு அயோத்திக்கு விலைமதிப்பிலான 1,250 கற்கள் கொண்டுவரப்பட்டன. இவை, தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் அஷ்டதாது எனப்படும் 8 உலோகங்களின் கலவையால் ஆனவை.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை அயோத்தி கர்சேவக் புரத்தில் இருந்த இவற்றை தற்போது காணவில்லை. ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டபோது இதனுடன் பழைய அறக்கட்டளை இணைக்கப்பட்டது. அப்போது பழைய அறக்கட்டளை கணக்கில் ரூ.8.5 கோடி காட்டப்பட்டிருந்தது. அந்த சமயத்திலும் விலைமதிப்பற்ற கற்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரை இதுவரை பதிவு செய்யாத அயோத்தி போலீஸார் இதற்கான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். ராமர் கோயிலுக்கான வரவு, செலவு தணிக்கை கணக்கிலும் தவறுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் கோயிலின் நன்கொடைகள், தணிக்கை அறிக்கைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் நிலக் கொள்முதல் குறித்த முழுமையான விவரம் கோரப்பட்டுள்ளது.








