சி.வி.சண்முகம் அலுவலகத்தில் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை!

திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அவை நடவடிக்கைகளில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமியுடன் காணப்படவில்லை.பொதுவாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வரும்போதும், செய்தியாளர்களை சந்திக்கும்போதும் எஸ்.பி.வேலுமணி உடனிருப்பார். ஆனால் இன்று அது மாதிரியான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கும் அவர் செல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், சட்டப்பேரவை நடவடிக்கைகள் முடிந்த உடனேயே எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அருள்மொழிதேவன், திருத்தணி ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்த நிலையில், அவர்களிடமிருந்து அந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டு இதுவரை மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து சி.வி.சண்முகம் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துவரும் சூழலில், அவரது அலுவலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனைகள் அதிமுக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.குறிப்பாக, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் உள்கட்சி பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.!