மேகதாது அணை! கர்நாடகாவுக்கு எதிராக CM விஜய் தனித்தீர்மானம்!

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.

மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கர்நாடகா அரசுக்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து ஆளுநர் உரை முழுமையாக சட்டசபையில் வாசிக்கப்பட்டது. இந்த சட்டசபை வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்கின. அப்போது முன்னாள் எம்எல்ஏக்கள் சங்கராபுரம் சி.கு.ராமசுவாமி, ஒரத்தநாடு த.வீராசாமி, புதுக்கோட்டை சி.சுவாமிநாதன், பர்கூர்- பென்னாகரம் அ.க.ஆறுமுகம், தாரமங்கலம் பெ. கண்ணன், நாகர்கோவில் நாஞ்சில் முருகேசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தமிழகத்தின் காந்தி என தோழர் நல்லகண்ணுவுக்கு புகழாரம் சூட்டி அவரது மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அது போல் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், பாரதிராஜா உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அவை முன்னவரும், அமைச்சருமான செங்கோட்டையன் மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானத்தை வழிமொழிந்தார். இதையடுத்து சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக ஒரு தனித்தீர்மானத்தை விஜய் முன்மொழிந்தார்.அப்போது விஜய் பேசுகையில், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். மேகதாது அணை திட்டத்திற்கு எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும் மாநிலங்களின் இசைவை பெறாமலும் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி செய்கிறது. இந்த அணை கட்டுவதற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதியை மத்திய அரசு கொடுக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை ஏற்க முடியாது. இந்த தீர்மானத்தை அரசியல் கடந்து அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஆதரவு தர வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், மஜக, விசிக ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.

கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான டி.கே. சிவகுமார், இந்த ₹7,150 கோடி மதிப்பிலான அணைத் திட்டம் என்பது தமிழ்நாட்டின் தண்ணீரைத் தடுப்பதற்கான ஆயுதம் அல்ல; மாறாக, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பெங்களூரு மாநகர மக்களின் தாகத்தைத் தீர்க்கும் ஒரு அமுதசுரபி.நாங்கள் இந்தத் தண்ணீரில் ஒரு சொட்டைக் கூட விவசாயத்திற்குப் பயன்படுத்தப் போவதில்லை,” என்று அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், சென்னைக்கு ஒரு சமாதானக் கரத்தையும் நீட்டினார். “பெங்களூரு மாநகரம் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. எங்களால் கிருஷ்ணா நதியிலிருந்து இங்குத் தண்ணீர் கொண்டு வர முடியாது; காவிரி மட்டும்தான் எங்கள் ஒரே நம்பிக்கை. இது முழுக்க முழுக்கக் குடிநீருக்கான திட்டம். சொல்லப்போனால், உபரி நீரைச் சேமித்து வைப்பதன் மூலம் வறட்சி காலங்களில் தமிழ்நாட்டிற்குத்தான் இது பயனுள்ளதாக இருக்கும்.” என்றார்.

கடந்த 2025-ஆம் ஆண்டின் அதித்தீவிர பருவமழையின் போது, சுமார் 400 டி.எம்.சி (TMC) தண்ணீர் வீணாகக் கடலில் கலந்ததை அவர் சுட்டிக் காட்டினார். அந்த நீர் மூலம் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரித்து, பெங்களூருவின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்வதில் என்ன தவறு? என்பதுதான் கர்நாடகாவின் வாதம்.

இதற்காக, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான அனுமதிகளைப் பெற, அம்மாநில முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோரை நேரில் சந்தித்துத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் நேரடியாக அமர்ந்து பேசவும் தயாராக இருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடகா மேகதாதுவில் ஒரு பிரம்மாண்டமான அணையைக் கட்டிவிட்டால், காவிரியின் முழுக்கட்டுப்பாடும் அவர்கள் கைக்குச் சென்றுவிடும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி, கர்நாடகா காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்வது பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்படும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பகிர்வுக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது தமிழகத்தின் தெளிவான நிலைப்பாடு.

இந்த அணை கட்டப்பட்டால், பசுமையாகக் காட்சியளிக்கும் காவிரி டெல்டா, நாளடைவில் வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒருமித்த குரலில் எச்சரிக்கின்றன.

கர்நாடகாவின் இந்த அணை கட்டும் முயற்சிக்கு கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காவிரி நீரை மேற்கண்ட மாநிலங்களும் பயன்படுத்துகின்றன.