ஒரே நாளில் 31 சிகரெட்டுகள் புகைத்த சென்னை மக்கள்- பட்டாசுக்கு தடை விதிக்க கோரி பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல் ..!

சென்னை: சென்னைவாசிகள் ஒரே நாளில் 31 சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமமான அளவில் தீபாவளி நாளில் காற்று மாசு பதிவாகி உள்ளதாக கூறியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பட்டாசை தடை செய்ய வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி முடிந்த மறுநாள் காலை, உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லியை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடம் பிடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

0 முதல் 50 என்ற தரக்குறியீட்டிற்குள் இருக்க வேண்டிய காற்று, சென்னையில் 786 என்ற அபாய அளவை தொட்டதாகவும், அது சென்னைவாசிகள் அனைவரும் ஒரேநாளில் 31 சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. வாகன பயன்பாடு, தொழிற்சாலை இயக்கத்தை விட தீபாவளி அன்று காற்று மாசு 10 முதல் 15 மடங்கு அதிகமாகியுள்ளது. வாகன புகையில் இருந்து வரும் நச்சு வாயுக்களை விட, பட்டாசு வெடிக்கும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு நச்சு சேர்மங்கள் வெளியேறுகின்றன.

ஏராளமான அளவில் கையாள முடியாத நச்சு திட கழிவுகளையும் பட்டாசுகள் உருவாக்கும் நிலையில், சூழலையும் மனித ஆரோகியத்தையும் சீர்குலைக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை தமிழ் சமூகம் நிறுத்த வேண்டும் என்றும் அரசும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.