இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு… கொல்லதான் வந்தேன்… குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் ..!

பாகிஸ்தான் குஜ்ரன்வாலாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நிலையில், இச்சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணம் வெள்ளிக்கிழமை இரண்டு பேரை கைது செய்தது. இவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை நவீத் முகமது பஷீர் என்பவருக்கு பாகிஸ்தான் ரூபாய் 20,000 த்துக்கு விற்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் கைதான பஷீர், இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களை தொடர்ந்து திசை திருப்பினார். அதனால் நான் அவர் மீது ஆத்திரமாக இருந்தேன். அதனாலேயே அவரை சுட்டேன் என்று ஒப்புக் கொண்டார். பஷீருக்கு ஆயுதம் விற்றவர்களில் ஒருவர் பெயர் வக்காஸ், இன்னொருவர் பெயர் சாஜித் பட். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஆயுதங்களை விற்றுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியப்படி நவீத் பஷீர், மிக அருகில் இருந்து இம்ரான் கானை சுட்டுள்ளார்.

காயமடைந்த இம்ரான் கான் சவுஹத் கானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் அங்கு உடல்நலம் தேறி வருகிறார். முன்னதாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஐவர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இப்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிடிஐ கட்சியைச் சேர்ந்த இம்ரான் கான் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி மேற்கொண்டிருந்தார்.

அந்தப் பேரணியில் அவருடன் பலர் அவருடன் ஈடுபட்டிருந்தனர். அப்போது இம்ரான் கான் சென்ற கண்டெய்னர் வாகனத்துக்கு அருகில் வந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விரைந்து இம்ரான் கானின் காவலர்கள் அவரை பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டுவந்தனர்.

துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி நவீத் எனும் நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அதனால் தான் அவரைக் கொலை செய்ய வந்ததாகவும் அந்நபர் வாக்குமூலம் அளித்தார்.

இம்ரான் கான் பேரணி நடைபெற்ற இடத்தில் இருந்து காலில் கட்டுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில், “கடவுள் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளார், நான் இன்னும் முழு பலத்துடன் போராடுவேன்” என்று இம்ரான் கான் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்ததோடு, இம்ரான் கான் விரைவில் நலம் பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.