பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு – எஸ்பி சஸ்பெண்ட்

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை புகாரில் புதுச்சேரி எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசுக்கு, கடந்த 2024ம் ஆண்டு காரைக்கால் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய சுப்பிரமணியன் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உள்புகார் குழு விசாரணையில் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டும், இதுவரை அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றார் என கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம்(24ம்தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ”சட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், நீண்ட காலமாக கோப்புகள் மட்டுமே ஒரு அலுவலக மேசையிலிருந்து மற்றொரு மேசைக்கு நகர்ந்து கொண்டிருப்பது ஏன்.

அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். ராமரின் பங்கை செய்ய வேண்டும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது ஏன்? பாலியல் தொல்லைக்கு ஆளானவரின் தாய் நீதிமன்றத்திற்கு வந்து நீதி கேட்டு அழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த விசாரணைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புதுச்சேரி தலைமைச் செயலாளர் சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும்” என எச்சரித்து, வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் எஸ்பியாக பணியாற்றி வரும் சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி அரசு நேற்று உத்தரவிட்டது.