9,840 கோடி ஸ்பேம் அழைப்புகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை வெற்றிகரமாகத் தடுத்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தங்களது ‘Safe Network’ பாதுகாப்பு முறைமையைப் பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9,840 கோடி ஸ்பேம் அழைப்புகள் கண்டறியப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பயனர்களை ஏமாற்றும் வகையில் வந்த 440 கோடி ஸ்பேம் குறுஞ்செய்திகளும், ஆபத்தான ஸ்பேம் இணைப்புகளை கொண்டிருந்த 16 லட்சம் குறுஞ்செய்திகளும் முடக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மோசடிகளும், தேவையற்ற விளம்பர அழைப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் எந்தவிதப் பொருளாதார இழப்பிற்கும் அல்லது மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பதற்காக இந்த நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.