கோவை கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை – வடமாநில இளைஞர்கள் கைது..!

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் மதுக்கரை அருகே உள்ள ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுக்கரை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது, சந்தேகத்திடமாக நின்றுக் கொண்டிருந்த வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது, சிறு பொட்டலங்களாக கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் பரோஸ் சர்மா (21) தனியார் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வந்ததும், மற்றொருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபால்குமார் (19) சமோசா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் ஏஜெண்ட் மூலம் கஞ்சாவை வாங்கி அதனை கல்லூரி மாணவர்களை குறி வைத்து ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருவரும் ஏஜெண்ட் மூலம் கஞ்சாவை வாங்கி அதனை கல்லூரி மாணவர்களை குறி வைத்து ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.