கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாய பண்ணை நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இதில் 21 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பதாங்காலி மாவட்டம். இங்கு உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான கெண்டிங் ஹைலேண்ட்ஸுக்கு வெளியே இந்த பேரழிவு ஏற்பட்டது. இது ரிசார்ட்டுகள் மற்றும் இயற்கை அழகுக்காக பிரபலமானது. இங்கு உள்ள ஆர்கானிக் விவசாய பண்ணையில் குடில்கள் அமைத்து சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதுபோக்குவார்கள்.
இந்த விவசாய பண்ணையில் விடுமுறை நாட்களில் உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்களை அமைத்து தங்குவார்கள். ஏராளமான சுற்றுலா பயணிகளும் தங்கியிருப்பார்கள். அந்த வகையில் இந்த பண்ணையில் சுமார் 100 சுற்றுலா பயணிகள் குடில்களை அமைத்து தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீட்டர் உயரத்தில் இருந்து மண் சரிந்து விழுந்ததில், சுமார் 1 ஏக்கர் நிலம் மண்ணால் மூடப்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கிருந்த சுற்றுலா பயணிகளின் குடில்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் குடில்களில் இருந்த ஏராளமானோர் உயிரோடு மண்ணோடு மண்ணாக புதையுண்டனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என சுமார் 400 பேர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மண்ணிற்குள் சிங்கியிருந்த 60 பேர் காயங்கள் எதுவும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளில் 5 வயது பச்சிளம் குழந்தை உள்பட 21 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த நிலச்சரிவில் 12 பேர் மாயமாகி உள்ளனர்.
காணமல் போனவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் பலி இன்னும் அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் சாலையோரம் இருந்த ஒரு பண்ணை வீடு இடிந்து விழுந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் நோரஸாம் காமிஸ், பண்ணை முகாம் தளத்தில் இருந்து 30 மீட்டர் உயரத்தில் இருந்து மண் சரிந்து விழுந்தது, சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவை மண்ணால் மூடியதாக கூறினார். மொத்தம் 79 பேர் நிலச்சரிவில் சிக்கியதாகவும், அதில் 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். 3 பேர் காயங்களுடனும் 23 பேர் பாதுகாப்பான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்புக் குழு அதிகாலையில் இருந்து வேலை செய்கிறது. நான் இன்று அங்கு செல்கிறேன். காணாமல் போனவர்கள் விரைவில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ட்வீட் செய்துள்ளார். சம்பவ இடத்தை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலும் இந்த பகுதில் உள்ள காடு மற்றும் நிலத்தை அகற்றுவதன் காரணமாக சிலாங்கூர் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் நிலச்சரிவுகளைச் சந்தித்து வருகிறது. ஓராண்டுக்கு முன்பு, நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பெய்த மழை வெள்ளத்தால் சுமார் 21,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.