டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கான மாதாந்திர ஒருங்கிணைந்த ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் படி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,710 முதல் முதல் ரூ.10,871 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபான விற்பனையானது, அரசின் டாஸ்மாக் மூலமாக நடைபெறுகிறது. நாள்தோறும் டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு வருவாயாக சுமார் ரூ.100 கோடிக்கு மேல் கிடைக்கிறது. விஜய்யின் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்வது பற்றி ஆலோசனை செய்து வருகிறது. குறிப்பாக பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.ஆனாலும் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கும் பழக்கம் நின்றபாடில்லை. கூடுதலாக ரூ.20 வரை வாங்கப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கான மாதாந்திர ஒருங்கிணைந்த ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வானது, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், மேற்பார்வையாளர்களின் மாத ஊதியம் ரூ.22,313 இல் இருந்து ரூ.33,023 ஆக உயர்கிறது. அதாவது ரூ.10,710 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.விற்பனையாளர்களின் மாத ஊதியம் ரூ.19,413 இல் இருந்து ரூ.30,284 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10,871 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.உதவி விற்பனையாளர்களின் மாத ஊதியம் ரூ.17,925 இல் இருந்து ரூ.28,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10,755 சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது.
இதே போன்று உயர்த்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில், டாஸ்மாக் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பானது 12 சதவீதமாக கணக்கீடு செய்யப்படும். இந்த தொகை ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். நிறுவனத்தின் சார்பிலும் 12 சதவீத பங்களிப்பானது வழங்கப்படும். ஊழியர் மற்றும் நிறுவனத்தின் இரு பங்களிப்புகளும் உரிய காலத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே. நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.








