காஸ்ட்லி உணவுகளை தோற்கடிக்கும் சிவப்பு எறும்பு சட்னி

ரத்துப் பொந்துகளில் வாழும் சின்னஞ்சிறு எறும்புகளைச் சேகரித்து, காரசாரமான சட்னியாக்கி, இன்று சந்தையிலும் ஹோட்டல்களிலும் விற்பனைக்குக் கொண்டுவந்தது வரை இதன் ஒவ்வொரு பின்னணியும் ஆச்சரியப்பட வைக்கிறது.

எறும்பு சட்னியை ஹோட்டல் மெனு கார்டில் பார்த்திருக்கிறீர்களா? மரத்தில் சாரை சாரையாக ஓடிக்கொண்டிருக்கும் சிவப்பு எறும்புகளைப் பிடித்து வந்து சட்னி அரைக்கிறார்கள் என்றால், நம்மில் பலருக்கு ஆச்சரியத்தில் புருவம் உயரத்தான் செய்யும். ஆனால், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்ட மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

தலைமுறை தலைமுறையாக அங்குள்ள பழங்குடியின மக்களின் ஃபேவரைட் உணவாக இருக்கும் இந்த சிவப்பு எறும்பு சட்னி, இப்போது இணையத்தில் திடீரென செம ட்ரெண்டாகி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

இந்தோனேசியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் மட்டுமல்லாமல், நமது இந்தியாவிலும் இதுபோன்ற விநோதமான உணவுப் பழக்கங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் ஒடிசாவின் இந்த சிவப்பு எறும்பு சட்னி, அதன் தனித்துவமான ருசியாலும் பாரம்பரியத்தாலும் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆங்கிலத்தில் ‘ரெட் வீவர் ஆன்ட்ஸ்’ (Red Weaver Ants) என்று அழைக்கப்படும் இந்த வகை சிவப்பு எறும்புகளை, உள்ளூர் மக்கள் ‘காய்’ (Kai) என்று அழைக்கின்றனர். இதனால் இதை வைத்து அரைக்கப்படும் சட்னிக்கு ‘காய் சட்னி’ என்று பெயர் வந்தது.

இது ஏதோ விநோதத்திற்காக செய்யப்படும் சமையல் மட்டுமல்ல; இதற்குப் பின்னால் ஒரு பெரும் போராட்ட வரலாறே அடங்கியுள்ளது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, கடந்த 2024-ம் ஆண்டு ஜன.2-ம் தேதி மயூர்பஞ்சின் “சிமிலிபால் காய் சட்னி”க்கு அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்னியை தயாரிக்கும் விதம் அத்தனை சுவாரஸ்யமானது. மயூர்பஞ்ச் காட்டுப் பகுதிக்குள் செல்லும் மக்கள், மரங்களில் இலைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டி எறும்புகள் கட்டியிருக்கும் கூடுகளைக் குறிவைக்கிறார்கள். பெரும்பாலும் அதிகாலை வேளையிலேயே இந்தக் கூடுகள் சேகரிக்கப்படுகின்றன. எறும்புகளோடு சேர்த்து அவற்றின் முட்டைகளையும் அள்ளி எடுக்கிறார்கள்.

ஆனால், இது ஒன்றும் அத்தனை சுலபமான வேலை கிடையாது. இந்த வகை சிவப்பு எறும்புகள் கடித்தால், தோலில் ஊசியால் குத்தியது போன்ற பயங்கர வலி ஏற்படுவதுடன் கொப்புளங்களும் வந்துவிடுமாம். இதனால் கூடுகளைச் சேகரிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிறது.

கூட்டிலிருந்து எறும்புகளையும் முட்டைகளையும் கவனமாகச் சேகரித்து வந்ததும், அவற்றைச் சுத்தப்படுத்தி சமையல் வேலைகளைத் தொடங்குகிறார்கள். சுத்தப்படுத்திய எறும்புகளுடன் உப்பு, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மசாலாவாக அரைக்கிறார்கள்.

சில பகுதிகளில் கூடுதல் சுவைக்காக புதினாவும் சேர்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் காரமும் புளிப்பும் சம விகிதத்தில் கலந்து நாக்கில் எச்சில் ஊறவைக்கும் வகையில் அட்டகாசமான சட்னி தயாராகிவிடுகிறது! இதனை அப்பகுதி மக்கள் சுடச்சுட சாதம் மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளோடு தொட்டுக்கொண்டு விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வீட்டு சமையல் அறையோடு இந்த சட்னி நின்றுவிடவில்லை. மயூர்பஞ்ச் வாரச்சந்தைகளிலும் இது விற்பனைக்கு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல், சில ஹோட்டல்களிலும் “சிவப்பு எறும்பு சட்னி” என்று பிரத்யேகமாக போர்டு போட்டு பரிமாறுகிறார்கள். காரமும் புளிப்பும் பின்னிப் பிணைந்த இதன் பிரத்யேக சுவைக்காகவே பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கி ருசிக்கின்றனர்.

ஆச்சரியம் என்னவென்றால், இதில் கொட்டிக்கிடக்கும் ஊட்டச்சத்துக்கள் தான். புரதம் (Protein), கால்சியம் (Calcium), இரும்புச்சத்து (Iron), துத்தநாகம் (Zinc), வைட்டமின் B-12 உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இதனால் இது வெறும் பாரம்பரிய உணவு மட்டுமல்லாமல், உடலுக்கு வலுவூட்டும் சத்துணவாகவும், நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் உருவெடுத்துள்ளது.

காடுகளில் உள்ள மரங்களில் (குறிப்பாக மாமரம், லோவா மரங்கள்) வாழும் நெசவாளர் எறும்புகளையும் (Red Weaver Ants) அவற்றின் முட்டைகளையும் பழங்குடியினர் சேகரிக்கின்றனர். 
  1. சேகரித்த எறும்புகளையும் முட்டைகளையும் முதலில் நன்றாக சுத்தம் செய்கிறார்கள்.
  2. பின்னர் அவற்றுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அம்மியில் அரைக்கிறார்கள்.
  3. இந்த சட்னி எறும்புகளில் உள்ள அமிலம் காரணமாக இயற்கையான புளிப்பு மற்றும் காரத்தன்மையுடன் மிகவும் சுவையாக இருக்கும். 
ஒடிசா மட்டுமின்றி சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் பழங்குடி மக்களிடையேயும் இந்த சிவப்பு எறும்பு சட்னி மிகவும் பிரபலமாகும். உலகப் புகழ்பெற்ற செஃப் கார்டன் ராம்சே (Gordon Ramsay) கூட தனது இந்திய உணவு ஆவணப்படத்தில் இந்த சட்னியை உலகின் மிகச்சிறந்த சட்னிகளில் ஒன்று என்று பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது