புதுச்சேரிக்கு ரூ.3,124 கோடி நிதி ஒதுக்கீடு – பிரதமருக்கும், நிதியமைச்சக்கும் முதல்வர் ரங்கசாமி நன்றி..!

த்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.3,124 கோடி ஒதுக்கியுள்ளதற்கு முதல்வர் ரங்கசாமி பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- புதுச்சேரி மாநிலத்திற்காக சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீட்டை சரிசெய்வதற்காக ரூ.1,250 கோடி மற்றும் 7-வது ஊதியக்குழு பரிந்துரையில் நிலுவைத்தொகைக்காக ரூ.150 கோடியும் சேர்த்து இந்த நிதியாண்டிற்கு மொத்தம் ரூ.3 ஆயிரத்து 124 கோடி மத்திய அரசு ஒதுக்கியிருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பது, வரி செலுத்துவோரிடையே மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. வேளாண் பெருமக்கள் நலன்கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத்துறை மேம்பாட்டிற்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது.

பயனளிக்கக்கூடிய பட்ஜெட் உணவு தானிய வினியோகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது, பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீராதாரம், மின்சாரம் ஆகியவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது, முதியோர் வைப்புத்தொகை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தியிருப்பது, போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம்கோடி, புதியதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க இருப்பது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. அதற்காக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.