இனி இ வாகனங்களுக்கு இலவச பர்மீட்… முக்கிய இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க தமிழக அரசு முடிவு.!

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல முன்னணி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த மின்சார வாகன உற்பத்தியில் 50 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் 7 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனை அதிகரிக்கும் வகையில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதி கட்டணத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. மெத்தனால், எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் பயணிகள் வாகனங்களுக்கும் பர்மிட் எனப்படும் அரசின் அனுமதி கட்டணம் இனி தேவை இல்லை இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்படும் இந்தசார்ஜிங் பாயிண்டுகள் மக்கள் பயன்பாட்டை பொறுத்து மேலும் பல இடங்களுக்கு அதிகரிக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியுள்ளார். மின்சார வாகன பயன்பாடு குறித்து மக்களிடம் மேலும் விழிப்புணர்பு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறினார். அண்மையில் உலகிலேயே மிக பெரிய மின்சார உற்பத்தி ஆலையை கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் அமைத்தது. ஓலா நிறுவனத்தை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியை தமிழ்நாட்டில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதால் தமிழ்நாடு இ வாகனங்களின் தலைநகராக மாரி வருகிறது.