ரூ.22 லட்சம் கையாடல்: தபால் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை- கோவை சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவை: ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணியாற்றியவர் சிவசுப்பிரமணி (வயது 51) சேலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில் தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தை முறையாக கணினியில் பதிவு செய்யவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களின் கணக்கு புத்தகத்தில் மட்டும் பணம் பெற்றுக் கொண்டது போல் கையால் எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க வந்தபோது அவர் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து தபால் அலுவலக உயர் அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் சிவசுப்பிரமணி மொத்தம் ரூ. 22 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது .இது குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை கோவை .சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ .நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் குற்றம் சாட்டப்பட்ட தபால் அதிகாரி சிவசுப்பிரமணியத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.இதையடுத்து தபால் அதிகாரி சிவசுப்பிரமணியம் சிறையில் அடைக்கப்பட்டார்.