ராமர் கோவில் பிரதிஷ்டை நடக்கும் தினத்தில் ராம நாமம் ஜெபித்து, விளக்கேற்ற வேண்டும்’ என பிரபல பாடகி இசைகுயில் கே.எஸ்.சித்ரா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்…

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என இந்து அமைப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகி இசைகுயில் கே.எஸ்.சித்ரா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், `ராமர் கோவில் பிரதிஷ்டை நடக்கும் தினத்தில் ராம நாமம் ஜெபித்து, விளக்கேற்ற வேண்டும்’ என கூறியிருந்தார். அந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவின. ஒரு சிலர் கே.எஸ்.சித்ராவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களையும், மீம்ஸ்களையும் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து கே.எஸ்.சித்ராவின் கருத்து அரசியல் தளத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளிதரன் கூறுகையில், “கே.எஸ்.சித்ராவுக்கு எதிராக நடக்கும் சைபர் தாக்குதல் கேரளா போலீஸ் கண்களுக்கு தெரியவில்லையா. ராம நாமம் சொல்ல வேண்டும், விளக்கேற்ற வேண்டும் எனக்கூறியதால் பாடகி சித்ரா மீது சைபர் தாக்குதல் நடக்கிறது. சகிப்புத்தன்மை குறித்து பிரசாரம் செய்யும் சி.பி.எம் இதுபற்றி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை. ரம்ஜான் புண்ணிய காலத்தைப் பற்றி யாரும் பேசலாம், கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் வேண்டுமானாலும் கேக் வெட்டி கொண்டாடலாம். ஆனால், இந்துக்களுக்கு மட்டும் கருத்துச்சொல்ல முடியாத நிலை உள்ளது. சபரிமலையில் ஆசாரத்தை மீறியவர்களுக்கு துணை நின்றவர்கள்தான் இப்போது கே.எஸ்.சித்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்துக்களின் 500 ஆண்டு காத்திருக்கும் நிகழ்வுதான் அயோத்தியில் நடக்க உள்ளது” என்றார். காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசனும் இசைக்குயில் சித்திராவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளார். வி.டி.சதீசன் கூறுகையில், “கருத்து கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. கருத்து கூறியதற்காக சைபர் தாக்குதல் நடத்துவது பாசிசமாகும்” என்றார். இதற்கிடையே சி.பி.எம் அமைச்சர் சஜி செறியான் இந்த விவகாரத்தில் கருத்து கூறுகையில்,”அயோத்தி ராமர் கோயில் குறித்த பாடகி கே.எஸ்.சித்திரா-வின் கருத்தை சர்ச்சை ஆக்க வேண்டாம். ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் போகலாம், நம்பிக்கை இல்லாதவர்கள் போகாமல் இருக்கலாம். கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு” என்றார்.