சென்னை, புறநகர் பகுதிகளில் 100 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன…

சென்னை: போகி பண்டிகை தினத்தில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்கும் வகையில், சென்னை, புறநகர் பகுதிகளில் 100 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலமாக, காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போகிப் பண்டிகையின்போது, வீடுகளின் இருக்கும் பழைய துணிகள், டயர்கள், ரப்பர்கள்,பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதை சென்னை மக்கள் கடைபிடித்து வந்தனர். இதனால், காற்றுஅதிக அளவில் மாசு அடைவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதுபற்றி கடந்த சில ஆண்டுகளாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. பழைய பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக்பொருட்களை எரித்தால் அது நாம் சுவாசிக்கும் காற்றில் நச்சு கலவையை ஏற்படுத்தி விடும் என்றுஇந்த ஆண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடர்ந்த புகையுடன் கூடிய நச்சு காற்றை சுவாசித்தால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்களுக்கு சென்னை, தாம்பரம், ஆவடிஆகிய 3 மாநகராட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புகையில்லா போகியைக் கொண்டாடும் வகையில், பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பழைய பொருட்களை மாநகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக வந்து சேகரித்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்த ஆண்டு நல்ல பலன் கிடைத்தது. மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், போகி தினத்தன்று பெரும்பாலானவர்கள் பழைய பொருட்களையும் குப்பைகளையும் எரிப்பதற்கு பதில் அவற்றை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தனர். அந்தவகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட15 மண்டலங்களில் சுமார் 48 டன், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் சுமார் 28 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. ஆவடி மாநகராட்சி பகுதியிலும் இதே அளவு குப்பைகள், பழையப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மொத்தத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி தினத்தில் 100 டன் பழையபொருட்கள், குப்பை சேகரிக்கப்பட்டுள்ளன, இதன்காரணமாக, சென்னையில் இந்த ஆண்டுகாற்று மாசு கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.