காலையில் ராஜினாமா.. மாலையில் பதவியேற்பு…மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார்.!!

பா.ஜ.க. ஆதரவுடன் 9-வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ் குமார்.அவருக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் பா.ஜ.க.வை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாகவும், 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டார்.

பீகாரில் மொத்தமுள்ள 243 இடங்களில் ஆர்ஜேடி 79 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் வென்றது. பாஜக 78 தொகுதிகளில் வென்ற நிலையில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனாலும், பாஜகவின் ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார் நிதிஷ் குமார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவுடனான கூட்டணியை திடீரென முறித்துக் கொண்டு உடனே ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார். தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சர் ஆனார். அதனைத் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை அமைப்பதில் நிதிஷ் குமார் முக்கிய பங்காற்றினார். எனினும், இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி அவருக்கு தரப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்தார். மகா (இந்தியா) கூட்டணியுடனான சூழல் சரியில்லை என்றும், ஆட்சி கலைக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, நேற்று மதியம் ஒரு மணி அளவில் மீண்டும் கவர்னரை நிதிஷ் குமார் சந்தித்தார். அவருடன், சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா தலைவர்கள், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோரும் சென்று கவர்னரை சந்தித்தனர்.

அப்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையொப்பம் அடங்கிய மனுவை கவர்னரிடம் அளித்து, தனக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரியிருந்தார். இதையடுத்து, ராஷ்டிரிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் நேற்று பீகாரின் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.

பீகார் மாநில கவர்னர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிதிஷ் குமார் பதவி ஏற்ற போது பா.ஜ.க. தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும் பாரத் மாதாகி ஜே என்றும் முழக்கமிட்டனர். நிதிஷ் குமாருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களில் 3 பேர் பா.ஜ.க.வையும், 3 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், ஒருவர் இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) கட்சியையும் சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ ஆவார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்தரி, விஜய குமார் சின்ஹா, பிரேம் குமார், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவோன் குமார், ஹிந்துஸ்தானி ஆவோம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) கட்சியின் தலைவர் சந்தோஷ் குமார் சுமன், சுயேட்சை எம்.எல்.ஏ. சுமித் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பா.ஜ.க.வை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.