கோவையில் ரூ.2.50 கோடி தங்க நகையுடன் எஸ்கேப் ஆன ஊழியர்-போலீஸ் வலைவீச்சு..!

கோவை ராஜவீதியை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர் வாங்கி தங்க ஆபரணங்களை தயார் செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை கொடுத்த ஆர்டரின் பெயரில் ரூ 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 6 கிலோ 273 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை தயார் செய்தார். அவரிடம் பணி புரியும் நடராஜன் (வயது 40) என்பவரிடம் அந்த நகைகளை கொடுத்து ஐதராபாத்திற்கு அனுப்பி உள்ளார் .ஆனால் நகையுடன் சென்ற நடராஜன் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் நகைகளுடன் தலைமறைவானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரராமன் கோவை கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான நடராஜன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.