உச்சநீதிமன்ற வைர விழா கொண்டாட்டம் – பிரதமர் மோடி பேச்சு.!!

வலுவான நீதித்துறையே வளர்ந்த இந்தியாவின் அடித்தளம்’ என உச்சநீதிமன்ற வைர விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

இந்திய உச்சநீதிமன்றம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 28ல் நிறுவப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 75வது நிறுவன தினத்தை முன்னிட்டு அதன் வைர விழா இன்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களின் தலைமை நீதிபதிகள், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். நீதித்துறையின் சிறந்த செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக இந்த நிகழ்வில் பல புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திர இந்தியாவின் கனவைக் கண்டனர்.

மேலும் இந்த கொள்கைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் தொடர்ந்து முயற்சித்துள்ளது. கருத்துச் சுதந்திரம், தனிப்பட்ட சுதந்திரம் அல்லது சமூக நீதி என எதுவாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்த மைல்கல் தீர்ப்புகள் நாட்டின் சமூக-அரசியல் சூழலுக்கு ஒரு புதிய திசையை காட்டியுள்ளன. வளர்ந்த இந்தியாவின் முக்கிய அடித்தளம் ஒரு வலுவான நீதித்துறை அமைப்பு.

நீதிமன்றங்களின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. கடந்த 2014-க்குப் பிறகு, நீதித்துறை மேம்பாட்டுக்காக ரூ.7,000 கோடிக்கு மேல் ஏற்கெனவே நிதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய உச்சநீதிமன்ற வளாக விரிவாக்கத்துக்கு, கடந்த வாரம் ரூ. 800 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.