குடியரசு தின விழா: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

ம் நாடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ந் தேதியை குடியரசு நாளாக அனுசரிக்கின்றது. இந்த வருடம் தனது 74வது குடியரசு தினத்தை அனுசரிக்கிறது.

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 1950 வரை இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்முறைக்கு வரவில்லை. டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசன வரைவு குழுவுக்குத் தலைமையேற்றார். இதையடுத்து 1949ல் இந்தியா அரசியல் சாசன நிர்ணய சபை சாசனத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுகிறது. ​

இதற்கிடையேதான் 26 ஜனவரி குடியரசு தினமாக நாடெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாகப் பார்க்கபடுவது டெல்லி ராஜப்பாட்டையில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும் வருடாந்திரப் பேரணிதான். அன்றைய தினத்தில் குடியரசுத் தலைவர் ராஜபாதையில் கொடியேற்றுவார். இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய பண்பாடு மற்றும் சமூக பாரம்பரியங்களின் அணிவகுப்பு, இந்திய ராணுவத்தின் வான் வெளி சாகசங்கள் ஆகியன இடம் பெறும், என்பது முக்கிய குறிப்பாககும்.

இந்நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அதில் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணி, முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல விமான நிலையத்தினை சுற்றிலும் 24 மணிநேரமும் ரோந்து பணி மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்ரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு இன்று முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.