மதமும், அரசியலும் வேறு வேறு… இரண்டையும் ஒன்றாக கலக்க கூடாது – சனாதனம் சர்ச்சை குறித்து மல்லிகார்ஜூன் கார்கே..!

லக்னோ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பான பேச்சை கையில் எடுத்துள்ள பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மதமும் அரசியலும் வேறு வேறு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிக பொருத்தமாக சனாதன தர்மம் ஒழிப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான் பேசியது சரிதான். அதில் தவறு எதுவும் இல்லை. சனாதன தர்மத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னதான் நடந்தாலும் நடக்கட்டும் என்றார்.

மேலும் ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகிறார்கள். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றார்கள். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர்.

வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அது மட்டும் இன்றி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக பேசினார். இதற்கு கூலாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி, 10 ரூபாய் கொடுத்தால் போதும் நானே எனது தலையை சீவிக்கொள்வேன்” என்று பதிலடி கொடுத்தார். அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை திரித்து பரப்புவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றன.

முதல்வர் மு.க ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே சனாதனம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மதமும் அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது பற்றி நான் அதிகம் பேச விரும்பபில்லை. இந்தியா கூட்டணியை நாங்கள் உருவாக்கியதும் பாஜக பாரதம் என்கிறது. இந்தியா, பாரதம் இரண்டுமே அரசியல் அமைப்பில் உள்ளது. எனவே இதில் சர்ச்சையை ஏண் உருவாக்க வேண்டும். பாரதம் என்ற வார்த்தையை நாங்கள் வெறுக்கவில்லை. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.