தாளவாடியில் கர்நாடகா எல்லைப் பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் பிரதேச எல்லை கலாச்சார விழா..!

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஜே எஸ் எஸ் மகாவித்யா பீடம் கர்நாடகத்தின்  மாநில எல்லை  மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தியாவின் சுதந்திர பவள விழாவை ஒட்டி மாநில எல்லை மேம்பாட்டு கலாச்சார விழா தாளவாடியில் உள்ள கிளாசிக் மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக தாளவாடி பசவேஸ்வரா சர்க்கிளில் இருந்து இருந்து மங்கள வாத்தியம், நந்தி கம்பம், வீரபத்ர ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு இசை மற்றும் நடன குழுவினருடன் கிளாசிக் மண்டபம் வரை ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கர்நாடக எல்லை பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சோமசேகர் தலைமை தாங்கினார்.
கன்னடம் மற்றும் கலாச்சாரத்துறை இயக்குனர் விஸ்வநாத் பி ஹிரேமத் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் சித்தூர் மடத்தின் பரமபூஜ்ய ஜகத்குரு சிவராத்திரி தேசிகேந்திர மகா ஸ்வாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதி மக்களின் கலாச்சாரம் அவர்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக தாளவாடி பசவ சமிதி தலைவர் வீரபத்ரசுவாமி  வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கன்னட இலக்கியம், நிலம், நீர் மற்றும் கலாச்சாரத்தில் தாளவாடி மக்களின் பங்களிப்பு, தாளவாடி மக்களின் மத மற்றும் கலாச்சார சடங்குகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களின் நடனம் மற்றும் தேச பக்தி பாடல்கள், கவிதை வாசித்தல் பஜனை நாட்டுப்புறப்பாடல் மற்றும் நாடக பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் இந்த விழாவில் கர்நாடக எல்லைப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் பிரகாஷ் மத்திஹள்ளி, தாளவாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரத்தினம்மா காளநாயக்கர், வட்டார கல்வி அலுவலர் பாகீரதி, தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஎஸ்எஸ் மகா வித்யா பீடம் மற்றும்  கல்வி நிறுவனங்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.