கோவையில் 50 மீட்டருக்கு ஒரு சி.சி.டி.வி .கேமரா பொருத்தும் திட்டம்-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்..!

கோவை சிங்காநல்லூர் நந்தா நகரில் ஒருங்கிணைந்த சி.சி.டி.வி கேமரா மையம் துவக்கம். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.
கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ளது நந்தா நகர். இப்பகுதி மக்கள் ஒத்துழைப்போடு சிங்காநல்லூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி கோவையை சேர்ந்த “ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப” நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வுடன் இங்கு 32 கண்கானிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் ஒருங்கினைந்த மையத்தின் துவக்கவிழா இன்று காலையில் அங்குள்ள வாணியர் முன்னேற்ற சங்க அரங்கில் நடைபெற்றது.
இதை கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் வி. பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை துவக்கிவைத்தார்.. அப்போது அவர் பேசியதாவது -பல்வேறு குற்ற செயல்களை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமரா பெரிதும் உதவுகிறது.கோவையில் 9730சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என்ற அடிப்படையில் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கோவை ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. தேவராஜ் பழனிசாமி 32 கேமராக்களை காவல் துறை ஆணையாளரிடம் முறையாக ஒப்படைத்து பேசியதாவது :- எங்கள் நிறுவனம் இணையதள சைபர் பாதுகாப்பு வழங்கும் நிறுவனமாகும். இன்றைய காலகட்டத்தில் கணினி மற்றும் வீடுகளில் குற்றச்செயல்கள் மிகவும் அதிகம் ஆகிவிட்டது. சிறிய கவனக்குறைவும் கூட குற்றவாளிகள் வீட்டிற்குள் கைவரிசை காட்ட வசதியாக போய்விடும். இத்தகைய சூழ்நிலையில், நாளெல்லாம் வீட்டில் அமர்ந்து வீட்டைப் பாதுகாப்பது என்பது இயலாத விஷயம். இதற்கு தீர்வாக சிசிடிவி கேமராக்கள் நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இப்பகுதி மக்கள் தங்களது வீடு மற்றும் கடைகளை முழுமையாக கண்காணிக்க மிகவும் உதவியாக இருக்கும்.அதிகரித்து வரும் குற்றங்களை பெரும்பாலும் தடுக்க முடியாது என்றாலும், அவற்றை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. அவை உங்கள் வீட்டையும் அலுவலகத்தையும் முற்றிலும் பாதுகாப்பான கண்காணிப்பில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும். இந்த கேமராக்கள் நிகழ்நேர வீடியோவைக் காண்பிக்கும். அடர்ந்த இருளிலும் தெளிவான காட்சியை வழங்கும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட சிசிடிவி கேமராக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இவற்றின் வீடியோ தரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இந்த கேமராக்கள் அனைத்து திசைகளிலும் சுழலும் லென்ஸ்கள் உடன் 360 டிகிரியில் கவரேஜ் செய்து கொடுக்கிறது. இந்த கேமராக்களில் ஹெவி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியின் ஒவ்வொரு அசைவையும் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து நிகழ்வுகளை பதிவு செய்து குற்றங்களை தடுக்க இது காவல் துறைக்கு நல்ல உதவியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை சரகம் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையாளர் திரு. எம்.ஜி. அருண்குமார் அவர்கள் வரவேற்றார்.சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்நன்றி கூறினார்.