ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் திடீர் குண்டு வெடிப்பு- நூலிழையில் உயிர் தப்பிய பிரதமர் கிஷிடா..!

ப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரை மீட்டு காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபரை சம்பவ இடத்திலேயே உடனடியாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேவேளை, கைது நடவடிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக உள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

உலகின் முன்னணி தலைவர் பங்கேற்ற நிகழ்வில் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் ஜப்பானில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக அச்சுறுத்தும் விதமாக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.முன்னதாக ஜப்பானின் பிரதமராக இருந்த ஷின்ஷோ அபே 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்குள்ளாகவே ஜப்பான் பிரதமர் குறிவைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.