கோவை கடைவீதி அடுத்த ராஜா வீதியில் உள்ள நகைக்கடைக்கு 2 பெண்கள் வந்தனர். அவர்கள் கடை ஊழியரிடம் 5 பவுன் தங்க செயினை காண்பிக்குமாறு கேட்டனர்.
அவர் ஒவ்வொரு நகையாக எடுத்து காண்பித்தார். பின்னர் ஒரு தங்க செயினை தேர்வு செய்த அந்த பெண்கள் அந்த நகையை எடைபோட்டு எத்தனை கிராம் வருகிறது, விலை எவ்வளவு? என கேட்டனர். விலையை சொன்னவுடன் எங்களிடம் அதற்குண்டான போதிய பணம் இல்லை. வீட்டிற்கு சென்று எடுத்து வருகிறோம் என்று கூறிவிட்டு 2 பேரும் சென்றனர். அதன்பின்னர் கடை பூட்டப்படும் நேரத்தில் ஊழியர்கள் இருப்பு நகைகளை சரிபார்த்தனர். அப்போது 5 பவுன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் செயின் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நகைக்கடை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.
பின்னர் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடைக்கு வந்த 2 பெண்கள் கவரிங் நகையை கொடுத்துவிட்டு, 5 பவுன் தங்க செயினை நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களை தேடி வருகின்றனர்.
Leave a Reply