குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தலைவர் என்பவர் யார்? அவரின் தகுதிகள் என்ன? அவரது கடமைகள், சலுகைகள் என்ன என்பதை தேர்ந்துகொள்வோம்.
இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர். இந்த நாட்டையே உலக அரங்கில் முன்னிலை படுத்தி இந்தியாவிற்கான அடையாளமாக திகழ்பவர் அவர். இந்தியாவின் தலைமகன் என்ற பெயரும் உண்டு. இந்திய அரசின்பால் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் இவரின் பெயரில் தான் எடுக்கப்படும்.
இந்திய குடியரசுத் தலைவராக வேண்டுமெனில்
இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்,
மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும், தகுதியும் நிறைந்தவராக இருக்க வேண்டும்.
மத்திய, மாநில, அரசு சார்ந்த வேலை செய்பவராக இருக்க கூடாது. அப்படி இருந்தாலும் தேர்தலின் போது அந்த வேலையை விட்டு விலகியிருக்க வேண்டும்.
சட்ட மன்ற உறுப்பினர்களைப் போல் குடியரசு தலைவரை மக்கள் நேராக தேர்ந்தெடுக்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மேலவை, மாநிலங்களவை, டெல்லி, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மறைமுக தேர்தல் மூலம் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பர்.
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, மக்களவை உறுப்பினர்களுக்கு என்று ஒவ்வொருவருக்கும் வாக்கு மதிப்பு வேறுபடும். மொத்த மதிப்புக்குகளை கணக்கிட்டே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், பிரச்சனைகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தால் தீர்க்கப்படும். நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது.
இந்திய தலைமை நீதிபதி முன்னிலையில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று உறுதிமொழியும் எடுத்துக் கொள்வார்.
குடியரசுத் தலைவர் சாதனை மற்றும் ஓய்வூதியச் சட்டம்,1951 இன் கீழ் அவரது ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது. நாட்டிலேயே அதிக ஊதியம் பெறும் அரசாங்க அதிகாரி குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசியலமைப்பின் இரண்டாவது அட்டவணையின்படி, முதலில், இந்திய ஜனாதிபதிக்கு மாதம் 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. 1998 இல், ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் சம்பளம் ரூ. 1,50,000 இல் இருந்து ரூ. 5,00,000 ஆக உயர்த்தப்பட்டது. சம்பளம் போகக் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும்.
ஒரு நாட்டின் உச்சபட்ச அரசியல், குடிமை, நிர்வாக தலைமை பொறுப்புகள் இவரிடம் இருக்கும். இந்திய அரசின் அனைத்து முக்கிய முடிவுகளும் இவரின் பெயரால் தான் எடுக்கப்படும். வரைவுகள் எல்லாம் இவர் கையெழுத்திட பிறகே சட்டமாக நடைமுறைக்கு வரும்.
மக்களவை நடைபெறாத காலத்தில் திடீர் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் இவருக்கு உண்டு. இவை மற்ற சட்டங்களை போலவே செயல்படும். அவசரக்காலத்தில் நாட்டின் மொத்த நிர்வாகமும் இவரது கையில் தான் இருக்கும்.
தூக்குத்தண்டனைக் கைதியின் கருணை மனுக்களை ஏற்கும்/பரிசீலிக்கும் உரிமை கொண்டவர். முப்படை தளபதியாக விளங்குபவர்.
இந்தியாவின் மிக பெரிய மதிப்புமிக்க ராஷ்டிரபதி பவன், ஜனாதிபதி தோட்டம், புது தில்லி, டெல்லி 110004. தான் குடியரத்தலைவரின் வீடு.
இந்தியாவின் வைஸ்ராய் இல்லமாக கட்டப்பட்ட வைஸ்ராய் மாளிகை, இன்றைய ராஷ்டிரபதி பவனாக பரிணமித்துள்ளது. 1929 இல் கட்டி முடிக்கப்பட்ட ராஷ்டிரபதி பவன் 340 அறைகளைக் கொண்டது. 130 ஹெக்டேர் (320-ஏக்கர்) பரப்பளவு கொண்ட இந்த அரண்ணோடு பாதுகாக்கப்படும் மாளிகைக்குள் வரவேற்பு மண்டபங்கள், விருந்தினர் அறைகள் மற்றும் அலுவலகங்கள் தோட்டம், பணியாளர்கள் குடியிருப்பு, போன்றவை அடங்கும். குறிப்பிட்ட தினங்களில் இந்த மாளிகையை பார்வையிட மக்களுக்கும் அனுமதி உண்டு.
மஷோப்ராவின் மலையுச்சியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர் ஆண்டுக்கு ஒரு முறை செல்வார். குடியரசுத் தலைவர் தங்கியிருக்கும் போது முக்கிய அலுவலகங்கள் அங்கு மாற்றப்படும். இந்த அமைப்பு முழுக்க முழுக்க தஜ்ஜி மரத்தால் ஆன சுவர்கள் கொண்டது. 1850 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் 10,628 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
போலாரத்தில் அமைந்துள்ள ராஷ்டிரபதி நிலைய கட்டிடம், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஹைதராபாத் நிஜாமிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1860ல் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் மொத்தம் 90 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இது, வளாகத்தில் 11 அறைகள் கொண்ட ஒற்றை மாடி அமைப்பாகும்.
குடியரசுத் தலைவரின் வாகனம் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வண்டியில் பதிவெண்ணுக்கு பதிலாக இந்திய அரசின் முத்திரை மட்டுமே போடப்பட்டிருக்கும்.
ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் (பிபிஜி) எனும் தனிப்படை இந்திய குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பை வழங்குவர். PBG என்பது இந்திய ஆயுதப்படையில் மிகவும் மூத்த, பழமையான பிரிவாகும். இது உலகின் ஒரே குதிரை சவாரி இராணுவப் பிரிவு ஆகும்.
ஓய்வூதியமாக மாதம் ரூ.1.5 லட்சம் (தற்போதைய விலையில்).
குடியரசுத் தலைவரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு மாதம் ரூ.30,000.
வாடகை இல்லாத VIII வகை மாளிகை வழங்கப்படும்.
இரண்டு இலவச கைபேசி, தொலைபேசி வசதி செய்து தரப்படும்.
ஐந்து தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஊழியர் செலவுகளுக்கு ஆண்டு ரூ.60,000 அளிக்கப்படும். துணையுடன் இலவச ரயில் அல்லது விமானப் பயணம் சேவையும் வழங்கப்படும்.
குடியரசுத் தலைவரை பதவி நீக்க வேண்டும் என்றால் அவர் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறினார் என்று நிரூபிக்கும் சான்றுகளோடு, சட்ட மண்டத்தின் நான்கில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டு, 14 நாட்கள் முன்னரே அவருக்கு நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அது நிரூபிக்கப்பட்டு அவையின் மூன்றில் இரண்டு பங்கினர் ஒப்புக்கொண்டால் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
Leave a Reply