பொங்கல் பண்டிகை : கோவையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு- ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கும் விற்பனை..!

கோவை: பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதைடுத்து கோவை கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆர்.எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியில் கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரி கூறும்போது “20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.800-க்கும், சில்லறை விலையில் ஒரு ஜோடி கரும்பு 100க்கும் விற்கப்படுகிறது. இன்றும் நாளையும் கரும்பு விற்பனை களைகட்டும் என்றார்.
கடந்தாண்டு 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.550-க்கும், ஒரு ஜோடி கரும்பு ரூ.80-க்கும் விற்கப்பட்டது. இந்த ஆண்டு விலை சற்று அதிகரித்துள்ளது. மார்க்கெட் பகுதிகள் தவிர, பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் வியாபாரிகள் கரும்புகளை குவித்து வைத்துள்ளனர்.
ஒரு கட்டு பூளைப்பூ ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் அதன் அளவுக்கு ஏற்ப விற்கப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து மஞ்சள் கொத்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கொத்து மஞ்சள் தழை ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும் விற்கப்படுகிறது. அதேபோல, கலர் கோலப் பொடிகள் ஒரு பாக்கெட் ரூ.12-க்கு விற்கப்படுகிறது. பொங்கல் பானை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து பானை விற்பனையாளர்கள் கூறும்போது, “2 கிலோ பொங்கல் மண்பானை ரூ.400-க்கும், ஒன்றரை கிலோ பொங்கல் மண்பானை ரூ.350-க்கும், மண் அடுப்பு பெரியது ரூ.400-க்கும், சிறியது ரூ 300-க்கும் விற்கப்படுகிறது.” என்றனர்.
பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, “நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவை பூ மார்க்கெட்டுக்கு வழக்கமாக இரண்டு முதல் மூன்று டன் மல்லிகை பூக்களும் காரமடை உள்ளிட்ட இடங்களில் முல்லை பூக்களும் வரும் ஆனால் பணியின் காரணமாக வரத்து குறைந்த தற்போது தினமும் தலா 300 கிலோ மல்லிகை, முல்லை பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைந்தாலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதாலும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது..” என்றனர்.
பூக்கள் விலை ஒரு கிலோவில் வருமாறு : செவ்வந்தி ரூ.160, சம்பங்கி ரூ.120, செண்டுமல்லி ரூ.100, காக்கடை ரூ.800, தாமரை ஒன்று ரூ.20, அரளி ரூ.450, ரோஜா ரூ.400, துளசி ரூ.30, கோழி கொண்டை ரூ.120, மரிக்கொழுந்து ரூ.60, முல்லை ரூ.3200, மல்லிகை ரூ.3200 என விற்பனையானது.