தமிழகம் வரும் பிரதமர் மோடி… திருப்பூரில் 10 லட்சம் பேரை திரட்ட பாஜக திட்டம்.!!

திருப்பூர் நகரம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமர் மோடியின் வருகைக்காகத் தயாராகி வருகிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார்.

பிரதமர் பங்கேற்றுப் பேசும் பொதுக்கூட்டத்திற்காக பல்லடம் அருகே மடப்பூர் கிராமத்தில் பரந்து விரிந்த மைதானத்தைத் தயார்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக நடத்தும் மிகப்பெரிய பொதுக்கூட்டம் இதுவாக இருக்கும் என்று திருப்பூர் பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். கூட்டம் நடைபெறும் இடத்தில் ஐந்து லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் இருக்கும் என்று ஒரு நிர்வாகி சொல்கிறார்.

பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் கோவை சூலூர் விமான நிலையத்திற்கு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதியம் 2.45 மணியளவில் மடப்பூர் வந்தடையும் அவர், ஒருமணி நேரம் கூட்டத்தில் பங்கேற்று விட்டு மதுரைக்குப் புறப்படுவார். மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் ‘டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க உள்ளார்.

இரவு மதுரையில் தங்கிய பின்னர், மறுநாள், பிப்ரவரி 28ஆம் தேதி, காலை தூத்துக்குடிக்குச் சென்று பல்வேறு திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். அங்கிருந்து நெல்லை செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் செல்வார்.