விவசாயிகள் போராட்டம்… பிப்.29 வரை நிறுத்தி வைப்பு.!!

புதுடெல்லி: எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறும் போராட்டத்தை வரும் 29 ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

போராட்டத்தை வழிநடத்தும் சம்யுக்தா கிசான் மோர்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்சா அமைப்புகள் அடுத்த ஒரு வாரத்துக்கான போராட்ட நிகழ்வுகளை திட்டமிட்டுள்ளன. அதன்படி பிப்.29 வரை டெல்லி சலோ போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை விவசாயிகள் பஞ்சாப் – ஹரியாணா எல்லைகளில் உள்ள ஷம்பு மற்றும் கனவுரி பகுதிகளில் தங்கி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவார்கள்.

இன்று (பிப்.24) மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி செல்லும் போராட்டம் நடக்கிறது. நாளை விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதி உலக வர்த்தக மையம் மற்றும் அமைச்சர்களின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. தவிர விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போராட்ட பின்னணி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது ஹரியாணா போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார். இதையொட்டி ஹரியாணா போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று அறிவித்துள்ளார். விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, டெல்லி சலோ போராட்டத்தில் ஈட்டி, கேடயம் போன்ற ஆயுதங்களுடன் நிஹாங்சீக்கியர்கள் கலந்து கொண்டுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த நிஹாங் சீக்கியர்கள் நேற்று முதல் டெல்லி எல்லையான ஷம்பு பகுதியில் குவியத் தொடங்கியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.