பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: கோவையில் 35,541 பேர் எழுதுகின்றனர்..!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை  (மார்ச் 13) இன்று தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 35,541 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 35 ஆயிரத்து 541 பேரும், பிளஸ் 1 பொதுத் தேர்வை 34 ஆயிரத்து 259 பேரும், எஸ். எஸ். எல்.சி. பொதுத் தேர்வை 41 ஆயிரத்து 526 பேரும் எழுத உள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. அவை கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத் தாள்கள் கோவை மாவட்டத்தில் 12 கட்டுக் கோப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பொதுத் தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த அறைகளுக்கு முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வினாத் தாள் கட்டுக் கோப்பு மையத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.