லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் பயணத்தில், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உறுப்பினர் உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
பிஹார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாட்னாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாட்னாவைச் சேர்ந்த அத்தர் பர்வேஸ், முகமது ஜலா லுதீன் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு சென்று போலீஸார் விசாரித்தபோது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு, தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு ஆகியவற்றுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாட்னா உட்பட பல்வேறு இடங்களில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் நூருதீன் ஜாங்கிஎன்ற ‘அட்வகேட்’ நூருதீன் என்பவர்தான், பிரதமர் மோடியை கொல்லும் சதி திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டது தெரிந்தது. தர்பங்கா பகுதியை சேர்ந்த இவர், உத்தர பிரதேசத்தில் பதுங்கியிருந்ததால், இவரை கைது பீகார் செய்ய உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவின் உதவியை பிஹார் போலீஸார் நாடினர்.
உத்தரப் பிரதேசத்தில் அலாம்பா காவல் நிலைய எல்லையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே நூருதீன் ஜாங்கியை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்ததாக பாட்னா சீனியர் எஸ்.பி. தெரிவித்தார்.
விசாரணையில் பீகார் தர்பங்கா மாவட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புடன் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்தே தொடர்பில் இருப்பதாக நூருதீன் ஜாங்கி தெரிவித்தார். கடந்த 2020-ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தர்பங்கா தொகுதியில் நூருதீன் ஜாங்கி போட்டியிட்டுள்ளார்.
Leave a Reply