இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை புதிப்பித்து தருமாறு கோவை கலெக்டரிடம் மனு..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் மாநகராட்சி 43-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்கு உட்பட்ட தெலுங்குபாளையம் வருவாய் கிராமத்தில், வேலாண்டிபாளையம் ஜவகர் புறம் பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த மையத்தின் மேற்கூரை ஓடுகள் உடைந்து, கட்டிடம் சிதலமடைந்து உள்ளது. 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் இந்த கட்டிடத்தை புதிதாக கட்டித் தர வேண்டும். மேலும் வெங்கடாபுரம் வெங்கடசாமி வீதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் சத்துணவு கட்டிடமும் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழைக் காலங்கள் தொடங்கியுள்ள நிலையில் உடனே அந்த இரண்டு கட்டிடங்களையும் புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.