நியாய விலை கடையில் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதா கிருஷ்ணன் அறிவிப்பு ..!

நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்கு ரேசன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் பொருட்கள் தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது என்றார். இதனை தமிழ்நாட்டில் 60 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர் என்றார்.

கௌரவ அட்டை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரேசன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 75 ரேசன் கடைகளை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ரேசன் கடை கட்டும் போது அதில் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், முதியோர் அமரும் வசதிகளோடு கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல், கூட்டுறவுத்துறையில் 3,997 காலிப்பணியிடங்கள் இருக்கிறது, அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

இந்தாண்டு மே 24-ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பகுதியில் தற்போது 40 நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை என்பதால் இன்று 10 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது என்றார்.

தமிழ்நாட்டில் தற்போது பதிமூன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க குடோன் உள்ளது. மேலும் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது என்றார். மேலும், ரேசன் கடையில் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.