கோவை மக்களே ரெடியா!! வாலாங்குளத்தில் 4 வகை படகு சவாரி தொடக்கம்..!

கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியில் ஸ்மார்ட்
சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் பூங்கா
அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய குளத்தில் படகு சவாரி
அமைக்கப்பட்டுள்ளது. உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள வாலாங்குளத்தில்
மிதவை பாலம், நடைபாதை, பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்மார்ட்
சிட்டி திட்டத்தில் வாலாங்குளத்தில் ரூ.45 லட்சத்தில் படகும் இல்லம்
அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று ஈச்சனாரியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் மாநகராட்சி சாா்பில் படகு இல்லம்
நிா்வகிக்கப்படுகிறது.

பெடல் படகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகு மற்றும் சைக்கிளிங் படகு என
4 வகையான படகு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பெடல் படகில் பயணம்
செய்ய 30 நிமிடத்துக்கு ரூ.300, துடுப்புப் படகில் 30 நிமிடத்துக்கு
ரூ.400, சைக்கிளிங் படகில் 15 நிமிடத்துக்கு ரூ.200, மோட்டாா் படகில் 8
பேருக்கு 20 நிமிடத்துக்கு ரூ.1000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு, தற்காலிகமாக அனைத்துப் படகு சவாரிகளுக்கும்
20 சதவீதம் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அதிகாரிகள்
தெரிவித்துள்ளனா்.