திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் எங்கோ மாயம்..!!

கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி. வீதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 21-ந் தேதி 35 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது. நேற்று புதுப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றனர். அங்கு இருந்த புதுப்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது உறவினர் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து 35 வயது வாலிபர் திருமணமான 3-வது நாளில் தன்னை தவிக்க விட்டு சென்ற மனைவியை மீட்டு தரும்படி வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

சுகுணாபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் அகிலா (24). இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு அவரது பெற்றோர் அடுத்த மாதம் 7-ந் தேதி திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அகிலா காந்திபுரம் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர் தனது தந்தைக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் தனது திருமணம் பிடிக்கவில்லை. அதனால் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என கூறியிருந்தார். இது குறித்து செல்வகுமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.