கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வழியாக எர்ணாகுளம் நோக்கி மெமு ரயில் நேற்று அதிகாலை 3-20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் பொள்ளாச்சி பாலக்காடு வழித்தடத்தில் அம்பராம்பாளையம் பகுதியில் சென்றபோது தண்டவாளத்தில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அதிகாலை நேரம் இருள் சூழ்ந்திருந்ததால் தண்டவாளத்தில் கிடந்த பொருள் தெரியவில்லை. தொடர்ந்து ரயில் அங்கிருந்து மீனாட்சிபுரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது .அங்கு ரயில் நிலைய அதிகாரியிடம் நடந்த சம்பவம் குறித்து இன்ஜின் டிரைவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் பாலக்காடு கோட்டரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்டவாளத்தின் அருகில் பெரிய கல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கல் மீது ரயிலின் முன் பகுதியில் உள்ள தடுப்பு கம்பி மோதியதில் அது தூக்கி வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.அங்கு ஆனைமலை போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பு பி. குமார் வந்து நேரில் ஆய்வு செய்தார்.பெரிய கல்லை வைத்திருந்ததால் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் நடைபெற்றுள்ளதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் அந்த பகுதியில் அமர்ந்து இரவு நேரங்களில் மது குடிக்கும் நபர்களின்விவரங்களை விசாரிப்பதோடு கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது:- அரியனாவில் இருந்து பாலக்காடு வழியாக பொள்ளாச்சிக்கு கார்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் அம்பராம்பாளையம் பகுதியை நள்ளிரவு 12 -20மணிக்கு கடந்தது. அப்போது தண்டவாளத்தில் கல் வைக்கப்படவில்லை. அதன் பிறகுதான் யாரோ கல்லை வைத்திருக்க வேண்டும் .அந்தக் கல்லால் ரயிலுக்கு எந்த சேதமும் இல்லை .ரயில் மோதியதில் சுமார் 40 மீட்டர் தூரம் அந்த கல் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதில் கல்லின் ஒரு பகுதி உடைந்து உள்ளது. தனிப் படைகள் அமைத்துதீவிரவிசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி








