காலாண்டு விடுமுறை நாட்களில் கூட ஆன்லைன் சிறப்பு வகுப்பு- தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் புகார்..!

காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்.10-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்.13-ம் தேதியும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த விடுமுறையில் முன் அனுமதியின்றி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் பல்வேறு தனியார் பள்ளிகள் முன் அனுமதியின்றி சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறும்போது, ‘விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதை மீறி கடந்த 2 நாட்களாக தினமும் காலை 9 முதல் மாலை 4 மணி வரை இணையவழியில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை எடுத்து வருகின்றன.

முழு வேலை நாட்கள்போல் தினமும் 7 மணி நேரம் வகுப்பை கவனித்துவிட்டு, பின்பு வீட்டுப்பாடங்களை பிள்ளைகள் செய்ய வேண்டியுள்ளது. விடுப்பு காரணமாக பலர் தங்களின் சொந்த ஊருக்கும், சுற்றுலாவும் சென்ற நிலையில், தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல்பாடுகள் மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித் துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.