எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும்- பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி..!

திருநெல்வேலி: “அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில், ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும்.

அதுதான் தமிழக முதல்வரின் விருப்பம்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் “இது நாட்டின் மிக முக்கிய பிரச்சினை அல்ல. அது அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம். அதற்கும் இந்த அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்குள் பல பிரிவுகளாக உள்ளனர். அந்தப் பிரிவுகளில் எது சரி, தவறு என்பதற்காக நீதிமன்றம் சென்றுள்ளனர்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை செல்கின்றனர். இதையெல்லாம் தாண்டி தேர்தல் ஆணையம் உள்ளது. இதன் முடிவுகள் வெளியான பின்னர்தான், அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில், ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும். அதுதான் தமிழக முதல்வரின் விருப்பம்’ என்றார்.