புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
விதிகளை மீறியதாக 19 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மக்களவையில் நேற்று முன்தினம் சபாநாயகரின் பேச்சைகேட்காமல், தொடர்ந்து பதாகைகளுடன் பேராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேர் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி, நேற்று அமளியில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 19 பேர், இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி என்விஎன் சோமு, எம்.எச்.அப்துல்லா, கல்யாணசுந்தரம், கிரிராஜன், என்.ஆர் இளங்கோ, சண்முகம் ஆகியோரும் அடங்குவர். இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 19 பேரை இடைநீக்கம் செய்யும் முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது. அவர்கள் அவைத் தலைவரின் வேண்டுகோளை தொடர்ந்து புறக்கணித்தனர். மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றம் திரும்பியதும், விலைவாசி உயர்வு குறித்த விவாதத்துக்கு அரசு தயார்’ என்றார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், மாநிலங்களவை நேற்று ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திரிணமூல் தலைவர் டெரிக் ஓ பிரையன், ‘இந்த அரசு ஜனநாயகத்தை இடைநீக்கம் செய்துள்ளது’ என்றார். திரிணமூல் எம்.பி சுஸ்மிதா தேவ் கூறுகையில், ‘பணவீக்கத்துக்கு மோடி அரசிடம்பதில் இல்லை. நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், எங்கள் கேள்விகளுக்கு பிரதமரால் பதில் அளிக்க முடியும்.நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக 19 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது நியாயமற்றது. நாங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவோம்’ என்றார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று கூறுகையில், ‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்னும் ஓரிரு நாளில் திரும்பிவிடுவார். அவர் வந்ததும் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும். பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, பணவீக்கம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
நாட்டில் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 15.18 சதவீதமாக இருந்தது. இது, அதற்கு முந்தைய மாதத்தில், 15.88 சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தின் அடிப்படையிலான மொத்தவிலை குறியீடு கடந்த 15 மாதமாக இரட்டை இலக்கத்தில் உள்ளது.
பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால், மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டன. தயிர், பிரட், பன்னீர் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.