சென்னை வரும் பிரதமர் மோடி: பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை..!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்குப் பிரதமர் வரவுள்ள நிலையில், இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சங்கர் ஜிவால் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.

இதில் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கிட்டதட்ட முடிந்துவிட்டன.

செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழா வரும் ஆகஸ்ட் 28இல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதற்காகப் பிரதமர் மோடி 28ஆம் தேதி குஜராத்தில் இருந்து சென்னை வருகிறார். பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் தனியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதனிடையே தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நிலையில், இன்று பாதுகாப்புப் பணிகளைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்தார். அப்போது பிரதமர் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சங்கர் ஜிவால் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், “நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் வருகையை முன்னிட்டு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையம், ஆளுநர் மாளிகை, நேரு ஸ்டிடேயம், அண்ணா பல்கலைக்கழகம் எனப் பிரதமர் கலந்து கொள்ளும் இடங்களில் 22 ஆயிரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நேரு ஸ்டேடியத்தில் மட்டும் 5 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு பெரியளவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து தனியாகச் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள், மைக்கரோ லைட் விமானங்கள், பாரா ஜம்பிங் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஹெலிகாப்டர் மற்றும் கான்வாய்க்கு பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் வருகைக்காக இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவோர் குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. என்ன மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து, பாதுகாப்பு கருதித் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.