கோவை ரயில் நிலையம் எதிரே சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு பணி முடிந்தது..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லங்கா கார்னர் வரை ஸ்டேட் வங்கி சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது.
பின்னர் அந்த பணிகள் முடிவடைந்ததும் இதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடி சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அந்த சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது.
மேலும் கோவை ரெயில்நிலையம் எதிரே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதைப் பார்த்ததும் அங்கு இருந்த போக்குவரத்து போலீசார் அந்த பள்ளத்தின் அருகே இரும்பு தடுப்பை வைத்தனர். சாலையை முறையாக சீரமைக்காததால் ரெயில்நிலையம் எதிரே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். நல்ல வேளையாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை.
இந்த பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும். அத்துடன் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என வாகனயொட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்று ஸ்டேட் வங்கி சாலையில் எற்பட்ட பள்ளத்தை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு சேதமடைந்த குடிநீர் குழாயை மாற்றும் பணிகள் நடைபெற்றது. இதனால் அந்த சாலை அடைக்கப்பட்டு ஒரு வழி சாலையாக மாற்றி வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.