பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது  83.36 அடியாக இருப்பதால்  அணையில் இருந்து  நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 13ம் தேதி வரை 23.8 டிஎம்சிக்கு மிகாமல் 120 நாட்களுக்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப் படை மதகுகள் வழியாக, முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து பவானிசாகர் அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மதகுகளின் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.  இதை தொடர்ந்து கீழ பவானி வாய்க்காலில் சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்களை தூவினர்.  முதற்கட்டமாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்று முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 23.8 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப் படை மதகுகள் பாசன பகுதியில் உள்ள  1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 2086  கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 83.36 அடி, நீர் இருப்பு 17.4 டி எம் சியாக உள்ளது. நீர்திறப்பு நிகழ்ச்சியில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் மன்மதன், செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி, அருள் அழகன், உதவி செயற் பொறியாளர்கள் பொங்கியண்ணன், ஆனந்தராஜ் உமாபதி, உதவி பொறியாளர் சுரேஷ் பாலாஜி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன் பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன்  மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்..