பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு..!!

சத்தியமங்கலம்: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணையில் தற்போது நீர் இருப்பு 16.52 டிஎம்சி ஆக மட்டுமே உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து   காலை 8 மணி நிலவரப்படி 519 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 81.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 1800 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 850 கன அடி தண்ணீரும், என மொத்தம் 2650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர் வரத்தை விட பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..