மேலும் ஒரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி… சென்னையில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!!

சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை போரூர் அடுத்த விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான பிரபு. இவர் தனியார் கம்பெனி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஓராண்டாக பிரபு வேலை இல்லாமல் இருந்த நிலையில் மது பழக்கத்தால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனால் கிரெடிட் கார்டு மற்றும் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான பிரபு, வாங்கிய கடனை கட்டமுடியாமல், மனஉளைச்சல் காரணமாக நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் காவல்துறையினர், பிரபுவின் உடலை மீட்டு, அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.