சென்னை ஐஐடியில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா-பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 196 -ஆக உயர்வு.!!

சென்னை: சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 196 -ஆக உயா்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவருக்கு கடந்த 19-ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில் அந்தப் பாதிப்பு பலருக்கும் பரவியது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனை முடிவுகளின்படி 171 பேருக்கு தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது.

வெள்ளிக்கிழமை மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 182- ஆக அதிகரித்தது.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை புதிதாக மேலும் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 196- ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.