இந்தியாவின் முதல் டொயோட்டா மிராய் ஹைட்ரஜன் கார் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில், இந்தியாவில் விற்பனையில் இல்லாத டொயோட்டா மிராய் காரை பயன்படுத்தியது செய்தியாக பரவியது. மேலும் அதுவே இந்தியாவிற்கு வந்த முதல் மிராய் காராக விளங்கியது. இந்த நிலையில், ஹைட்ரஜன் மூலமாக இயங்கக்கூடிய இந்த டொயோட்டா காரின் மற்றொரு மாதிரி கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட முதல் டொயோட்டா மிராய் காராகும். இந்த மிராய் காரினை கேரளாவில் பதிவு செய்திருப்பது தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் ஆகும். ஆனால் பதிவு செய்யப்பட்டுள்ள மிராய் ஹைட்ரஜன் கார் தற்போதைக்கு ஆராய்ச்சி விஷயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஓர் வாகன பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட மிராய் கார் கவர்ச்சிக்கரமான சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த காருக்கு கேஎல் 1 சியூ 7610 என்கிற நம்பர் ப்ளேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் எந்தவொரு கூடுதல் வரியும் கிடையாது. வாகன பதிவிற்கான கட்டணத்தை மட்டுமே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, டொயோட்டா மிராய் ஹைட்ரஜன் காரின் மதிப்பு ரூ.1.1 கோடி என்ற அளவில் இருக்கும். இந்த காரை பதிவு செய்துக்கொள்ள அரசாங்கம் அளித்துள்ள வரி விலக்கிற்கு காரணம், இந்த காரை ஆய்வு பரிசோதனைகளுக்காக மட்டுமே பயன்படுத்துவோம் என டொயோட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டதே ஆகும். டொயோட்டா அதன் எதிர்கால ஹைட்ரஜன் வாகனங்களுக்காக நாடு முழுவதும் ஹைட்ரஜன் எரிவாயு நிலையங்களை நிறுவி வருகிறது.
நிறுவப்பட்டபின், இந்த ஹைட்ரஜன் எரிவாயு நிலையங்களை சோதனை செய்ய இந்த மிராய் கார் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. அதுவரையில், பதிவு செய்யப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட டொயோட்டா மிராய் கார் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநள் கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. ஸ்ரீ சித்ரா திருநள் கல்லூரியானது ஆட்டோமொபைல் சார்ந்த படிப்புகளை வழங்குவதில் சிறப்பு வாய்தததாக உள்ளது.
மத்திய அரசாங்கத்தின் பெரும் முயற்சியினாலும், மாநில அரசாங்கங்களின் மானியங்களினாலும் இந்திய போக்குவரத்து மெல்ல மெல்ல பசுமை போக்குவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதில் தற்போதைக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஹைட்ரஜன் போன்ற இதர பசுமை எரிபொருள் வாகனங்களின் எண்ணிக்கை என்று பார்த்தால், மிக குறைவே ஆகும்.
ஏனெனில் நம் நாட்டில் இன்னமும் ஹைட்ரஜன் எரிவாயு நிலையங்கள் முழுமையாக விரிவடையவில்லை. ஏற்கனவே கூறியதுபோல், பெட்ரோல் & டீசலுக்கு மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை நாடு முழுவதிலும் கொண்டுவரும் திட்டத்தில் ஆளும் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன்படி சர்வதேச ஆட்டோமோட்டிவ் தொழிற்நுட்ப மையத்துடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டுவரும் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக டொயோட்டா மிராய் கார் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
நீல நிறத்தில் காட்சியளித்த இதில்தான் நிதியமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் பயணம் செய்தார். மத்திய அரசாங்கத்தின் பைலட் திட்டத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது தற்போதைக்கு தெரியவில்லை. ஆனால் இந்த திட்டம் வெற்றியடைந்தால் நாட்டில் ஹைட்ரஜன் எரிவாயு மூலமாக இயங்கக்கூடிய பேருந்துகளையும், லாரிகளையும் மற்றும் இதர வாகனங்களையும் அதிகளவில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள மிராய் கார்கள் சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் அதன் இரண்டாம் தலைமுறை ஆகும். இது ஹைட்ரஜன் வாயு மூலமாக மின்னோட்டத்தை உருவாக்கி அதன் மூலம் இயங்குகிறது. அதாவது, உள்ளே வழங்கப்படும் ஹைட்ரஜன் வாயுகள் ஆக்ஸிஜன் வாயு மற்றும் நீர் உடன் இணைந்து மின்னோட்டத்தை ஏற்படுத்துகிறது.
பின்னர் இந்த மின்னோட்டம் காரில் வழங்கப்பட்டுள்ள சிறிய அளவிலான பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு, பிறகு எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு தேவைக்கேற்ப வழங்கும். மிராய் ஹைட்ரஜன் காரில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி ஆனது வழக்கமான எலக்ட்ரிக் கார்களில் உள்ள பேட்டரிகளை காட்டிலும் கிட்டத்தட்ட 30 மடங்கு அளவில் சிறியதாகும். 2ஆம் தலைமுறை மிராய் ஹைட்ரஜன் காரின் எரிபொருள் டேங்கை முழுவதுமாக நிரப்பினால் அதிகப்பட்சமாக 646 கிமீ தொலைவிற்கு இயங்கலாம் என்கிறது டொயோட்டா.
Leave a Reply