ஆன்லைன் ரம்மி தடை மசோதா : மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

ளுநர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதாந்திர உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில், இவ்விவகாரம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இவைதவிர ஏற்கெனவே செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களுக்கான விரிவாக்கத்துக்கும் நிதி ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, தொழில் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் புதிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது, புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான விளக்கம் தந்தபின்னும் சட்டமசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்” எனவும் தெரிவித்தார்.

மேலும், “Online game, offline game குறித்து நாங்கள் விளக்கி இருக்கிறோம். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இதுவரை 12 பேர் தற்கொலை. சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது ஏற்கத்தக்கதல்ல” எனவும் தெரிவித்தார்.